"பாட்டி...ஏதாவது கதைசொல்லு பாட்டி."
"எங்கதையே பெரிய கதை...இதுல நா என்ன புது கதை சொல்றது?"
"உனக்கு சொல்லத் தெரியாதா? ராமசாமி தாத்தா நல்லா கதை சொல்லுவாரு."
"அப்படியா? என்ன கதை?"
"ராஜா கதை...நரிக் கதை...எல்லாமே."
"ம்ம்ம்...எப்போ கடைசியா தாத்தனை பார்த்தே?"
"இப்போல்லாம் போறதில்ல பாட்டி. அப்பாவுக்கும் தாத்தாவுக்கும் சண்டை. அவரு அப்பாவை திட்டிட்டாராம்."
"போச்சாதுடு. உனக்கு வேணா கரண்ட் வந்தப்புறம் நா கல்கோனா பண்ணி தரட்டுமா? இப்போ சமையக்கட்டு ரொம்ப இருட்டா இருக்கு."
"கல்கோனாவா? அது இனிக்குமா? நல்லா இருக்குமா?"
"ஓ...நீ சாப்பிட்டதில்லையா?"
நான் அவளை முதன்முதலில் பார்த்தது மூன்றாம் வகுப்பு படிக்கும் பொழுது; என் பெரிய பாட்டி, அவள் அக்கா, இறந்த பொழுது. அப்படியென்று தான் நினைக்கிறேன். பஜாஜ் ஸ்கூட்டரில் அப்பா, அவருக்குப் பின்னாடி தாண்டுகால் போட்டு அண்ணன், அப்புறம் அம்மா, எல்லார்க்கும் முன்னாடி நான். இரு முட்டிகளையும் ஸ்கூட்டர் பெட்டியில் அழுத்தி ஒரு பக்கம் சாய்ந்து உக்கார்ந்தும் உக்காராதது போல் நிற்பேன். அப்பா அவருடைய சீட்டில் ஒரு நுனியை எனக்கு தந்திருப்பார்; ஆனால் அது எப்போதும் எனக்கு பத்தாது.
"அப்பா...தாடி குத்துது பா."
"அச்சச்சோ. சரி சரி...கொஞ்ச கீழ உக்காருடா. மறைக்குது பாரு."
"ம்ம்ம்...இப்போ ரோடு தெரியுதா?"
"ம்ம்ம்ம்"
"நாம எங்கப்பா போறோம்?"
"பாட்டி ஊருக்கு."
"இன்னும் எவ்ளோ தூரம்?"
"கொஞ்ச தூரம் தான்...போயிரலாம்."
"நான் அவங்களை பார்த்ததே இல்லையே!"
பாட்டி வீட்டிற்கு வெளியே மடக்கும் இரும்பு நாற்காலிகள் போட்டிருந்தார்கள். முட்டி வலித்தது. எல்லாம் காலியாக இருந்தது. செருப்பையும் தாண்டி மண் ரோட்டின் புழுதி பாதத்தின் மேல் வந்து அப்பிக் கொண்டிருந்தது. "அது தான் பாட்டி," கையைச் சுரண்டினாள் அம்மா, "போய் பேசு போ. உன் மாமா பொண்ணு கூட தான் இருக்கா. அக்காட்டையும் பேசு போ." பைப் ட்ரம்மில் இருந்து கோப்பைகளில் ரஸ்னா பிடித்துக் கொண்டு இருந்தார்கள். அக்கா பாட்டிக்குப் பக்கத்தில் நின்று பேசிக் கொண்டிருந்தாள். பாட்டியின் கையைப் பிடித்து எங்கோ வரச் சொல்லிக்கொண்டிருந்தாள். பாட்டி தொட்டுப் பார்க்க எப்படி இருப்பாளோ தெரியவில்லை. என்னைப் பார்த்து என்னவோ சொன்னாள்; சிரித்தாள். சிறிய முகம், அதிலும் பாதி முகத்தில் பச்சையாய் என்னவோ பரவி இருந்தது.
"என்னது பாட்டி உங்க மூஞ்சில?"
"அதுவா.." சிரித்துக் கொண்டே முகத்தைத் தடவிப் பார்த்து, "மச்சந்தான்" என்றாள்.
"மச்சம்னா சின்னதா தானே இருக்கும். உங்களுக்கு ஏன் இவ்ளோ பெருசா இருக்கு? எனக்கு பாருங்க எப்படி இருக்குனு."
மிகவும் சிறிய உருவம் அவளுக்கு. கல்யாணத்திற்கும் சரி பண்டிகைக்கும் சரி, அவள் பட்டோ ஜரிகையோ உடுத்திப் பார்த்ததில்லை. 'அம்பர்' புடவையை மட்டும் தான் கட்டுவாள். சேலையின் இரு ஓரத்திலும் கையகல பார்டரில் சின்னச்சின்ன பூக்கள் போட்டிருக்கும்; மற்றபடி பிளைன் சேலை தான். முந்தானை அதிகம் விடாமல் இடுப்பு வரையில் தான் விட்டிருப்பாள்; முந்தானை சிறியதாக விட்டதால் மீதமான சேலை எல்லாவற்றையும் மடித்துச் சொருகி வயிற்றுனருகே ஒரு சின்ன மூட்டையைப் போல் சேர்ந்திருக்கும். எல்லா நிற சேலைக்கும் வெள்ளை ஜாக்கெட் தான் அணிவாள; முன்புறம் கொக்கி வைத்துத் தைக்காமல் பின்னூசி போட்டு குத்தியிருப்பாள். அது ஏனோ தெரியவில்லை. சாப்பிட்டதும் பல் குத்த படக்கென்று முதலாய் குத்தியிருக்கும் பின்னூசியை எடுக்க வசதியாய் இருக்கும் போல.
ஐம்பதைத் தாண்டும் முன்னே கணவனை இழந்திருந்தாள். ஆனால் தாத்தா ஒரு போட்டோவில் இன்னொரு பாட்டியுடன் நின்றுகொண்டிருந்தார். எல்லா தாத்தா பாட்டியைப் போல சிரிக்காமல், உம்மென்று நின்று கொண்டிருந்தார்கள்.
"இது யாரு மா?" சுவற்றில் தொங்கிக்கொண்டிருந்த புகைப்படத்தைப் பார்த்து கேட்டேன்.
"என் அப்பா."
"அதில்ல...பக்கத்துல?"
"அது உன் பெரிய பாட்டி."
"ஆனா பார்வதி பாட்டி இல்லையே அது," எனக்கு ஒன்றும் புரியவில்லை.
"அது ஒரு பெரிய கதை."
"மா...மா...ப்ளீஸ்...சொல்லு மா."
"சரி. பார்வதி பாட்டியோட அக்காவைத் தான் தாத்தா முதல்ல கல்யாணம் செஞ்சாரு. அந்த பாட்டி தான் போட்டோல இருக்காங்க. கல்யாணம் முடிஞ்ச அடுத்த நிமிஷம், உன் பாட்டியோட அப்பா உன் தாத்தா கால்ல விழுந்துட்டாராம். 'என்னை மன்னிச்சுருங்க. என் பொண்ணு பெரிய மனுஷி ஆகலை.' னு."
"அப்டி எல்லாம் இருப்பாங்களா மா? அவங்க வயசுக்கே வரலையா?"
"ப்ச்...சில பேருக்கு அப்படி ஆகும்."
"ஏன் அப்படி பொய் சொல்லி கல்யாணம் பண்ணாங்க?"
"ஏன்னா அந்த காலத்தில அப்படி தான். அந்த பாட்டி மூத்தவங்க. அவங்களுக்கு கல்யாணம் ஆனா தான் அவங்களோட தங்கச்சிக்கெல்லாம் கல்யாணம் ஆகும்னு அப்படி செஞ்சுட்டார்."
"ஓ...அப்புறம் என்ன ஆச்சு?"
"உன் கொள்ளு தாத்தா 'எனக்கு இன்னும் மூணு பொண்ணுங்க இருக்கு. அடுத்த பொண்ணையும் உங்களுக்கே கட்டி வைக்கிறேன்'னு சொல்லிருக்கார். ஆனா உங்க பெரிய பாட்டிக்கு அடுத்த தங்கச்சிய புடிக்காதாம். மூணாவது தங்கச்சிய தான் புடிக்குமாம்."
"பார்வதி பாட்டியவா?"
"ம்ம்ம்...ஆனா அப்போ பார்வதி பாட்டிக்கு வயசு ஒன்பது தான். அவங்க பதினாறு வயசு ஆகற வரைக்கும் வெயிட் பண்ணி தாத்தா கல்யாணம் பண்ணிகிட்டார். ரெண்டு பாட்டியும் தாத்தாவும் ஒரே வீட்ல தான் இருந்தாங்க. எங்க அப்பா அவ்ளோ பொறுமையானவராம்."
அதன் பிறகு நிறைய தடவை பாட்டி வீட்டிற்கு அனுப்பி விட்டார்கள். விட்டத்தளத்தில் தூரி கட்டித் தருவாள். சாயங்காலம் ஆனால் சட்டென்று ஏதாவது பலகாரம் பண்ணி தருவாள். அவள் உயரத்தை விட ஐந்தாறு மடங்கு வளர்ந்திருக்கும் சல்லையை உயரப் பிடித்து கோணப்புளியங்காய் அடித்துத் தருவாள். பெட்டிக்கடை வைத்து வியாபாரம் செய்வாள்.
"நீ என்ன பாட்டி படிச்சிருக்க?"
"நா எங்க படிச்சேன்?"
"அப்புறம் எப்படி கணக்கு போடுற?"
"எங்கம்மா அந்த காலத்துல வட்டிக்கு பணம் குடுப்பாங்க. 'போய் வசூல் பண்ணிட்டு வா'னு சொல்வாங்க. அப்படியே காலணாவும் எட்டணாவும் கூட்டி கூட்டி கத்துக்கிட்டது தான்."
அடிக்கடி 'பங்காரம்' என்பாள். அப்படினா தங்கமாம்; அம்மா சொன்னாள்.
"பாட்டியோட அம்மா எங்கம்மா?"
"அவங்களும் இறந்துட்டாங்க."
"எப்படி?"
"உனக்கு எதுக்குடி அந்த கதையெல்லாம்?"
"மா...சொல்லு மா. நம்ம பாட்டி கதை தானே."
"நீ விட மாட்டியே," பெருமூச்சு விட்டு தொடர்ந்தாள்,"பாட்டியோட அம்மாவுக்கு ரொம்ப வயிறு வலிக்குமாம். ஒரு நாள் பஸ்ல பாட்டி,பாட்டியோட அக்கா, அம்மா எல்லாரும் போய்ட்ருந்தாங்களாம். அந்த கொள்ளுப்பாட்டி பார்வதி பாட்டியோட சின்ன தங்கச்சிய மட்டும் வெச்சுட்டு ...அவங்க அப்போ கைக்கொழந்தையாம்...மத்த கொழந்தைகளை கீழ இறங்க சொல்லிட்டாங்களாம். யாருக்கும் ஒன்னும் புரியலயாம். அழுதுட்டே இறங்கிட்டாங்களாம். அப்புறம் அவங்க போய் அந்த கொழந்தையோட ஆத்துல விழுந்து செத்துட்டாங்களாம்."
எனக்கு பாவமாய் இருந்தது. அடுத்த விடுமுறையில் அம்மாவுக்கு வேலை இருந்ததினால் பாட்டி ஊருக்கு போக முடியாது என்று சொல்லிவிட்டாள்.
"மா...பாட்டி ஊருக்கு போறேன் மா. நா இருந்துப்பேன்மா பாட்டி கூட."
"தனியாவா?"
"ஓ..."
"நடுராத்திரி அம்மா வேணும்னு அழுதேனா யாரும் ஒன்னும் செய்ய முடியாது. பாட்டி ஊரு ரொம்ப தூரம்னு தெரியும்ல?"
"இருந்துப்பேன் மா."
"நீ தனியாலாம் இருந்ததில்ல, பாப்பா. சும்மா இரு. அடுத்த தடவ போய்க்கலாம்."
"மா..." அழுக ஆரம்பித்திருந்தேன். "இருந்துப்பேன் மா."
"பாக்கத்தானே போறேன்." என்று சொல்லி, ரொம்ப யோசித்து அனுப்பி வைத்தாள்.
அம்மா சொன்னது சரி தான். எப்படித்தான் சொன்னாளோ? நடு இரவில் நாய் குலைத்து விருக்கென்று முழிக்க வைத்து விட்டது. கூரையில் ஓடு இருட்டோடு இருட்டாய் அப்பி இருந்தது. கண்களை இறுக்கி மூடிக் கொண்டேன். அம்மா இருந்தால் கையை மேல போட்டு இறுக்கியிருப்பேன், பயம் போயிருக்கும். அம்மா இருந்தால் நன்றாக இருக்கும். அடிவயிற்றில் முட்டிக்கொண்டு வந்தது. கால்களை வேகமாக ஆட்டினால் காலை வரை தாங்கும் என்று நினைத்தேன்.
"பங்காரு...என்னாச்சு?"
பாட்டி முழித்துவிட்டாள்.
"அம்மா..."
"அம்மா ஊர்ல இருக்கா டா. நீ இப்போ தூங்கு."
"பாத்ரூம் வருது."
"நா கூட்டிட்டு போறேன் வா."
அந்த இருட்டிலும் வீட்டின் வெளியே இருந்த குளிக்கும் இடத்திற்கு கூட்டிக் கொண்டு போனாள். அரைத்தூக்கத்தில் தண்ணீர் அண்டாவிற்குள் சொம்பை விட்டுச் சுரண்டி, "இந்தா...வெது வெதுன்னு இருக்கு. ஊத்தட்டும்மா? கழுவிக்கிறியா?" என்றாள்.
நாய் இப்போது வீட்டினருகே குலைத்தது.
"ஒண்ணுமில்ல ஒண்ணுமில்ல. எதோ தெருநாய்....ச்சூ...போ அந்த பக்கம்."
கையை இருகப் பற்றி கூட்டிக்கொண்டு போனாள்.
"நல்ல தைரியமான புள்ளைல. நீ தைரியமா இருந்தா தானே அம்மா மறுபடியும் விடுவா?"
தலையைத் தடவி விட்டுக்கொண்டே சொன்னாள். பயம் சுத்தமாய் காணாமல் போயிருந்தது. பாட்டியின் மூக்குத்தியின் வாசம் எனக்குப் பிடித்திருந்தது.
"நீ எந்திரிக்கறப்போ என்னையும் எழுப்பி விடு பாட்டி. நானும் உங்கூடையே எந்திரிச்சுப்பேன். நானும் உங்கூட பால் பண்ணைக்கு வர்றேன்."
"சரி...எழுப்பி விடறேன். இப்போ பொட்டாட்ட தூங்கு." அவள் முந்தானையின் ஒரு முனையை எடுத்து என் ஆள்காட்டி விரலில் கட்டிக்கொண்டேன். ஒருவேளை அவள் என்னை எழுப்ப மறந்து போனால், அவள் சேலை என்ன எழுப்பி விடும்.
காலையில் தொலைபேசி அடித்தது. வீட்டிற்குள் பளீரென்று வெளிச்சம். பக்கத்தில் பாட்டி இல்லை; தொலைபேசியில் யாருடனோ பேசிக்கொண்டிருந்தாள்.
"அட...எந்திரிச்சிட்டியா?"
"நீ எப்படி பாட்டி எந்திருச்சே? நான் தான் உன்ன கட்டிப் போட்டிருந்தனே?"
சிரித்தாள்.
"போ பாட்டி."
"அடப்போ...லீவுல இருக்கற புள்ள எங்கூட நாலு மணிக்கு எந்திருச்சு என்ன பண்றே?"
"அக்கா எங்க காணோம்?"
"அந்த கோமதி வீட்டில இருக்கா. காலைலயே போய் என்னதான் பண்ணுவாளோ?" எரிச்சலோடு சமையலறைக்குள் சென்றாள். "போ... நீ போய் மூஞ்சி கை கால் கழுவிட்டு, பல்லு தேய்ச்சுட்டு வா. பூஸ்ட் போட்டுத் தர்றேன்."
"பாட்டி...நா கடைல இருந்து பொம்மை பிஸ்கட் எடுத்துக்கவா?"
"ம்ம்ம்...ஆனா பாத்து. கண்ணாடி ஜாடி."
ஜாடியைத் தூக்க முடியாமல் தூக்கி திண்ணையின் மேல் வைத்து சாலையின் எதிரே இருக்கும் பள்ளியைப் பார்த்தபடி உக்கார்ந்து கொண்டேன். இன்னும் சிறிது நேரத்தில் காலை இடைவேளையின்போது நிறைய மாணவர்கள் கடைக்கு வருவார்கள். வீட்டை ஒட்டியேதான் பாட்டியின் கடை. பலகை வைத்து அடைத்து வீட்டிலிருந்து பிரித்திருந்தாள். அந்த கால கடை, ஆனால் உள்ளே எல்லாம் இருக்கும்: சீடை, தேன்மிட்டாய், பேனா, பலூன். பீடியை மட்டும் வீட்டிற்குள் வைத்திருப்பாள்; பெரிய அண்ணன்கள் கேட்டால் மட்டும் உள்ளிருந்து எடுத்து வருவாள். நான் யாரிடமும் சொல்லக் கூடாது. சொன்னால் போலீஸ் பிடித்துக் கொண்டு போய்விடுவார்களாம்.
கடைக்கு வெளியே மூங்கில் பந்தல். நடு மூங்கிலுக்கு அருகே நட்டிருந்த காகிதப்பூச் செடி வளர்ந்து பந்தலெல்லாம் படர்ந்திருந்தது. மாலை வேளையில், புழுதியெல்லாம் கிளப்பிக்கொண்டு ஒரு காற்று அடிக்கும். அப்போது நடந்தால் பாவாடை எல்லாம் தூக்கிக்கொள்ளும். கையில் பாவாடையைப் பிடித்துக் கொண்டு கண்களைக் குறுக்கினால் தான் நடக்க முடியும். 'ஊ...ஊ' என்று சத்தமிடும். எங்கிருந்து சத்தம் வருகிறது என்று மேலே பார்த்தால் பேய் படத்தில் வருவது போல் மரங்கள் ஆடிக்கொண்டிருக்கும். ஆனால் இந்த காகிதப்பூ மட்டும் அசராமல் எல்லாவற்றையம் பார்த்துக்கொண்டிருக்கும். எப்போதாவது தோன்றினால் ஆங்காங்கே ஒரு சில பூக்களைச் சிதற விடும். அது வாடிப் பார்த்ததில்லை; வாசம் வந்தும் பார்த்ததில்லை.
"ஏய்...அதுக்குள்ள பூராத்தையுந் தின்னுட்டியா?"
"..."
கண்ணாடி ஜாடியின் அடித்தளத்தில் மட்டும் கொஞ்சம் பிஸ்கட்டுகள் மிச்சம் இருந்தன.
"போதும் போ. நொறுக்குத்தீனியே சாப்டுட்டு இருந்தா சாப்பாடு எப்ப சாப்பிடுவ?" என்று ஜாடியைக் கையில் எடுத்துக் கொண்டாள் பாட்டி.
ஒரு வேளை கோபித்துக் கொண்டிருப்பாளோ?
"இந்த புள்ள எங்க இன்னும் காணோம்? எங்க போனாளோ...எனக்கு இந்த கோமதிய சுத்தமா புடிக்கல. கண்டத கத்து கொடுத்துட்டு..."
முணுமுணுத்துக் கொண்டே அருகில் வந்து திண்ணையில் உட்கார்ந்தாள்.
"ஆனா நா போகல பாட்டி."
"நீ நல்ல பொண்ணுடி...எம்பங்காரம் ," என்று திருஷ்டி போக்கி நெட்டை முறித்தாள்.
பால் பண்ணையில் வேலை செய்யும் அண்ணா கடைக்கு வந்திருந்தார். "ஏம்பாட்டி...இது யாரு புதுசா?"
"பேத்தி பா. கௌரியோடது."
"அப்படியா! டவுன்ல இருந்து வந்திருக்கா? இருப்பாங்களா?"
"இல்ல தம்பி. அவங்க அம்மா ஊருல இருக்கா. இவ இங்க மூணு நாள் தனியா இருந்ததே பெரிய விஷயம். நாளைக்கி கொண்டு போய் விட்டுட்டு வந்துருவேன்."
"அது சரி. ஒரு 'ஹான்ஸ்' பாக்கெட் மட்டும் எடுத்திருக்கேன் பாட்டி, கணக்குல எழுதிக்கோ. வாரேன்."
"பாட்டி...நா லீவு முடியற வரைக்கும் இங்கயே இருக்கனே."
முகம் மாறியது; மெதுவாகக் கன்னத்தைத் தடவிக்கொடுத்து சொன்னாள்,"அழக் கூடாது...என்ன! அம்மா நேத்து போன் பண்ணா. உன் ஞாபகமாவே இருக்காம். அதனால உடனே கூட்டிட்டு வர சொல்லிட்டா."
"நா போ மாட்டேன்" என்றேன் கண்ணீருக்கிடையில்.
"பங்காரம்ல...இந்த ட்ரிப் அம்மா சொல்றத கேட்டேனா தானே அடுத்த தடவ விடுவா? சொல்றத கேட்டினா அடுத்த தடவ வர்றப்போ தூரி கட்டித் தருவேன்."
"நிஜமாவா?"
"கண்டிப்பா...என்ன பலகாரம் வேணுமோ செஞ்சு தருவேன்."
ஏதேதோ சமாதானம் செய்து அனுப்பி வைத்தாள். ஒருவழியாக இரண்டு மாதங்கள் கழித்து விடுமுறை வந்தது. கனவிலேயே தூரியும் வந்தது. இந்தத் தடவை அக்காவைப் போல் மேல போகணும். நல்லா உந்தனும்.
"மா...நா ரெடி."
"இவ ஒருத்தி. காலங்காத்தால. மெதுவா கிளம்பலாம்டி. மணி ஏழரை தான் ஆகுது."
வாசலில் மணி அடித்தது. மாமா வந்திருந்தார்.
"ஐய்...மாமா..." ஓடிப்போய் கட்டிக்கொண்டேன்.
கையை விலக்கி, "ஆங்...போய் அம்மாவ வர சொல்லு", என்றார்.
அம்மா அதற்குள் முன்னறைக்கு வந்திருந்தார். ஈரைக்கையை அவசரமாக சேலையில் துடைத்து நாற்காலியை இழுத்துப் போட்டார்.
"என்ன ஆச்சு டா? போன் கூட பண்ணாம வந்திருக்க?"
"எல்லாம் ஆச்சு. இதுல போன் ஒரு கேடு. உங்க அம்மா என்ன பண்ணிருக்கா தெரியுமா?"
"ஏண்டா இப்படி பேசற? ஏங்க...இங்க வாங்க. நீ உக்காரு முதல்ல. தெளிவா சொல்லு."
"காலைல சீனு போன் பண்ணிருந்தான்."
"என்னபா இப்ப தான் வந்தியா?" அப்பா தூக்கத்தில் இருந்து முழித்து லுங்கியைச் சரி செய்து கொண்டே வந்தார்.
"அந்த தோட்டத்து வீட்ட மூத்த மகன் பேர்ல எழுதி வெச்சுட்டா."
"பாலன் பேர்லயா?"
"அதெப்படி அண்ணன் பேர்ல மட்டும்...நான்தான் அந்த வீட்டோட பங்கை நம்பி இங்க கடன் வாங்கிருக்கனே. அம்மாவுக்கும் அது தெரியுமே!"
"அதான் மண்டையைக்கழுவி வாங்கிட்டான். இவளுக்கு எங்க போச்சாம் அறிவு?"
"ஏன்பா...பாலனா அப்படி செஞ்சான்?" என்றார் அப்பா மறுமுறை.
"அவன் பேரக் கூட சொல்ல இஷ்டம் இல்ல எனக்கு...ச்சை. ஏன்...அவன் மட்டும் தான் அவளுக்கு புள்ளையா? நம்ம ரெண்டு பேரும் இல்லையாமா?"
அம்மா தொலைபேசியை எடுத்தாள். பாட்டி வீட்டுத் தொலைபேசியின் முதல் நான்கு எண்களை அழுத்தினாள். அதற்குள் மாமா கையிலிருந்து அதைப் பிடுங்கி விட்டெறிந்தார்.
"இல்ல டா...ஏன் அப்படி செஞ்சாங்கன்னு கேக்கலாம்."
"நா சொல்றது உனக்கு புரியலியாக்கா? உனக்கு அந்த பார்வதி வாயில இருந்து கேட்டா தான் நம்புவியா? நான்தா சொல்றன்ல. சீனு ரெஜிஸ்ட்ரார் ஆபீஸ்லயே பாத்திருக்கான்."
"என்ன பா அவ இவங்கிற?" அப்பாவிற்கு தூக்கம் கலைந்து விட்டது போல.
"இன்னும் கேவலமா பேசுவேன்."
"பாப்பு...நீ உள்ள போடா." அப்பா என் தோள்மேல் கை வைத்து உள்ளே நகர்த்தினார். அம்மா ஒரு பக்கம் அழ ஆரம்பித்திருந்தார். இவங்க எப்போ பேசி முடித்து எப்போ ஊருக்கு போவோம் என்றிருந்தது. கிளம்ப வசதியாக துணி அடுக்கி வைத்திருந்த பையை உள்ளிருந்து எடுத்து வந்தேன்.
மாமா முறைப்பாய் பையைப் பார்த்தார், "என்ன இது?"
"ஊருக்கு, மாமா."
"எங்க?"
அம்மா என் கையிலிருக்கும் பையைப்பிடுங்கி எனக்கும் மாமாவுக்கும் இடையில் வந்து நின்றாள், "இல்ல...அம்மா ஊருக்கு போலாம்னு கேட்டுகிட்டே இருக்கா."
"என்னக்கா? என்ன முட்டாளாக்க பாக்கறியா? இவ்வளவு சொல்றேன்--"
"ஏய்...இதல்லாம் இப்பதான டா சொல்ற?"
"ஆனா இப்பவும் பைய எடுத்துட்டு கெளம்பறியே?"
"யாரு நானா?" என்றபடி பையை வெடுக்கென்று தூரப் போட்டாள்.
"இப்ப நா என்ன பண்ணனும்னு--"
"கேஸ் போட்றலாம்கா."
"..."
"ஏய்...என்ன பா சொல்ற? பேசி பாக்கலாம்பா முதல்ல." என்றார் அப்பா.
"ஆமாம் பா. பாட்டி ஊருக்கு போய் பேசிப் பாக்கலாம். சீக்கிரமா ஊருக்கு போய்டலாம் முதல்ல."
"ஒரு மண்ணாங்கட்டியும் தேவையில்லை. ஏய் பாப்பா...நீ உள்ள போ. மாமா...பேசறதெல்லாம் வேலைக்காகாது மாமா. ஏக்கா...என்ன சொல்ற நீ? மண்டைய தனியா கழட்டி வெச்சு யோசிக்கப் போறியா?"
உதட்டில் வறண்டு நீட்டிக்கொண்டிருந்த தோலை பிய்த்துக் கொண்டிருந்தாள் அம்மா. எப்பவும் பதட்டமாய் இருந்தால் தான் அப்படி செய்வாள்.
"இருடா...திடுதிப்புனு வந்து... கொஞ்சம் யோசிக்கலாம்."
"இங்க பாரு. நான் உங்கூட இருக்கேன். நம்ம ரெண்டு பேருக்கும் அந்த வீட்டுல உரிமை இருக்கு. சொத்தை பிரிக்க கேஸ் போடறோம் கா."
அப்பா அதற்குள் எனக்கு காசு கொடுத்து கடைக்குப் போய் பால் வாங்கிவிட்டு வரச் சொன்னார். பக்கத்து அண்ணா கடை மூடியிருந்தது. பெரிய ரோட்டில் இருக்கும் கடைக்குத் தான் போக வேண்டும்.
"அண்ணா, ஒரு லிட்டர் பால் குடுங்க."
"ஏம்மா...தனியாவா வந்தே? பாத்து ரோட்ட க்ராஸ் பண்ணனும், சரியா?"
"நா போய்க்குவேன் ணா."
காசைக் கொடுத்து விட்டு குடுகுடுவென்று வீட்டிற்கு வருவதற்குள் மூச்சிறைத்தது. வீடு அமைதியாக இருந்தது. அம்மா, அப்பா, மாமா இன்னும் முன்னறையில் தான் இருந்தார்கள், ஆனால் அமைதியாக இருந்தார்கள். அம்மா மட்டும் எதோ யோசித்துக் கொண்டே இருந்தாள். அண்ணன் இன்னும் தூங்கிக் கொண்டிருந்தான்.
மெதுவாக அம்மாவின் அருகில் சென்று,"அம்மா...ஊருக்கு போக நேரமாச்சுமா," என்றேன்.
உதட்டை பிய்த்தவாரே, "ஊருக்கு போகல" என்றாள்.
"நாளைக்கு போலாமாமா?"
"இனி பாட்டி ஊருக்கு போக மாட்டோம். போய் டிவி பாரு போ."
"ஏன்மா...பாட்டி தூரி கட்டித்தர்றேனு சொல்லியிருக்காங்க."
"தூரி தானே...நா காட்டித் தர்றேன். இனி பாட்டி வீடு கெடையாது."
மாமா ஒரு மூலையிலிருந்து என்னை முறைத்துக் கொண்டிருந்தார். டிவியில் என்னவோ ஓடிக்கொண்டிருந்தது. கண்களில் தேங்கிய கண்ணீரின் வழியே ஊதா நிறத்தில் என்னவோ அசைந்தது தெரிந்தது. பாட்டியின் காகிதப்பூ மரம் போல.
அருமையான பதிவு தன்ஷி. கதாபாத்திரங்களின் உணர்வுகள் மிக அழகாக வெளிப்பட்டிருக்கின்றன.
ReplyDeleteசொத்துக்காக பிரிந்த குடும்பங்களில் இவ்வாறாக பாட்டியை பிரிந்த கதைகள் இருக்கத்தான் செய்கின்றன.