Tuesday, 25 April 2017

ஓட்டம்


இதைத் தமிழிலில் எழுதுவதா ஆங்கிலத்தில் எழுதுவதா என்று மண்டையை உடைத்து கொண்டு யோசித்ததில் (சரி,புரிகிறது 'கிளிசே' ...அதற்கு தமிழிலில் என்ன? நைந்து போன சொற்றொடர்! பாருங்கள் இதனாலையும் தான் உடைத்துக் கொண்டேன். ஆங்கிலத்தில் எளிதாக சொல்லிவிட்டு போகக் கூடிய பல சொற்களுக்கு நாம் ஓடி வந்து சுவரைத் தாண்டுவோம் (இது கிளிசேவைத் தவிர்க்கும் முயற்சி) ஆனால் இது ஆங்கிலத்துக்கும் பொருந்தும். சரி, தமிழிலேயே எழுதலாம் என்று தோன்றியது.

ஆங்கிலம் படித்த நானே (கர்வம் துளி கூட இல்லை, ஏனென்றால் என்னைத் விட அதை  நன்றாக நிறைய பேர் பேசுகிறார்கள், எழுதுகிறார்கள். என்னைப் பொறுத்த வரையில் அதில் நான் கையும் தேறவில்லை வாயும் தேறவில்லை) பல சமயம் குழம்புகிறேன். ஒரு மொழிக்கு எத்தனை மாறுபாடுகள்! பிரிட்டிஷ் ஆங்கிலத்தில் ஆஹா! நாம் தேர்ந்துவிட்டோம் என்று நினைத்தால் அமெரிக்க ஆங்கிலம் நம்மிடம் எள்ளி நகைக்கும். அமெரிக்க ஆங்கிலம் மட்டுமல்ல, ஆஸ்திரேலியா, கனடா என்று இது நீளும். பல வருடங்கள் கற்றுகொண்ட மொழியை அதே மொழியைப்  பேசும் வேறு  நாட்டவரிடம் பேசும் போது அது அங்கு தவறு என்னும்போது முகத்தில் அறையும் அந்த உணர்தல் இருக்கே...இதற்கு என் தாய்மொழி எவ்வளவோ மேல் என்று நினைக்கத் தோன்றும். அது தவிர, தாய்மொழியைத்  தவறாகப்  பேசினாலோ, வேற்று மொழி நபர்கள் தமிழைக் கிழித்தாலோ, "ஐயோ! அழகு என்று நெட்டை முறிப்பார்கள்." அதுவே ஆங்கிலத்தில் தவறாகப் பேசி விட்டோம், ஏதோ அநாகரிகம் செய்து விட்டதைப் போல் இருக்கும். பார்ப்பார்களா என்று தெரியவில்லை, ஆனால் கண்டிப்பாக நமக்கே தோன்றும்.

இது ஏதோ மொழி சார்பான கட்டுரை என்று நினைக்க ஆரம்பித்துவிடுவீர்களோ என்ற பயத்தில் சொல்ல வருவதைச் சொல்லி விடுகிறேன். எந்த மொழியில் எழுதுவது என்பதே இப்பொழுது தான் பிடிபட்டிருக்கிறது. யாரும் பிடித்துத் தள்ளாமல், தானே அரைகுறை நம்பிக்கையில், என்ன செய்கிறோம் என்று தெரியாமல் வாழும் வாழ்கை எப்பொழுது பிடிபடப் போகிறது?

ஆங்கிலத்தில் இதை 'ப்ளையிங் ப்ளைண்ட்' என்று சொல்வார்கள். எனக்கு மிதிவண்டி ஓட்ட சுத்தமாகத் தெரியாது, ஆனாலும் ஏதோ ஒரு தைரியத்தில் இதோ ஏறி  உக்கார்ந்து விட்டேன், இதோ காலை மேலே எடுத்து விட்டேன், இதோ மிதிக்கிறேன், இதோ ஒட்டுகிறேன் என்று பயம் கலந்து தோன்றுமே...அப்படி! ஓட்டுகிறேன்...ஆனால் எங்கே செல்வது என்று தோன்றவில்லை. ஆனாலும் ஒட்டுகிறேன். பல சமயம் இலக்கை எப்படியாவது அடைவதற்காக, சில சமயம் ஒரு திகிலான சிலிர்ப்புக்காக. ஆனால் இதைத் தொடர்ந்து 50 வருடங்கள் எப்படிச் செய்கிறோம்?

செய்கிறோமே! அதுவும் நகரத்தில் கூச்சமில்லாமல் செய்யும் பல செயல்களைப் போல் இதையும் செய்கிறோம்...வாழவும் செய்கிறோம். ஒரு சராசரி வேலை நாளில் ரோட்டைப்  பாருங்கள். வங்கைத் தீ வைத்தால் வெளியே ஓடி வரும் எலிக் கூட்டத்தை போல் தோன்றும். தீ மட்டும் தான் வித்தியாசம். இங்கு அக்கினிக் குஞ்சும் இல்லை, வெந்து தணிய காடும் இல்லைபோக்குவரத்து சமிக்ஞை பச்சை எறிந்தால் விசை முறுக்கிய தானியங்கி எலிகள் தான் ஓடும்: இருசக்கரம் ஓட்டும் குட்டி எலிகள், கார் ஓட்டும் குண்டு எலிகள். வளைத்து நெளித்து ஒட்டி ஒரு வழியாய் சேருமிடம் சேர்ந்து, தட்ட வேண்டியதைத் தட்டி, செய்ய வேண்டியதைச் செய்து,பேச வேண்டியதையும் பேச வேண்டாததையும் பேசி அடித்துப் பிடித்து வீட்டுக்கு வந்து படுத்து எழுந்து மறுபடியும் ஓட்டம்.

மழை பெய்தால் நாம் நனைந்தாலும் பரவாயில்லை என்று மடிக்கணினியைக் கட்டித் தாவும் கங்காரு வாழ்கை. பக்கத்து வீட்டுக்காரன் குரல் கூட எப்படி இருக்கும் என்று தெரியாத பாம்பு வாழ்க்கை. இவர்களை எல்லாம் எது வாழ உந்துகிறது?

கலையா? பேருந்தில் நாம் பார்க்கும் 10ல் 8 பேர் எப்படித் தான் அவர்களின் புத்தகத்தை முதல் பக்கத்தில் இருந்து ஆரம்பிக்கிறார்களோ! 5 பக்கங்கள் புரட்டியதும் பாவம் ரோட்டை ரசிக்க ஆரம்பித்து விடுவார்கள். பேருந்தில் செல்லும் ஒரு மணி நேரத்தைக்  குறட்டை விட்டுத் தூங்கியும் பாட்டைக் கேட்டுக் கழித்தும் செல்பவர்களே இவர்களுக்கு மேல்.

இப்படி ஒவ்வொன்றையும் நம் பட்டியலிலிருந்து அடித்தம் செய்யலாம். ஒப்பனை செய்த முகங்களின் பின்னாலும் முத்திரையில் தன்னை உலகுக்குக் காட்டும் சட்டைக்குப் பின்னாலும் இந்திரிய உந்துதலைத் தவிர வேறு ஒன்றையும் தேடிக் கண்டுபிடிக்க முடியாது.

வாழ்க்கையில் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்று தேடி அலையும் இன்னொரு ரகம் உண்டு. சராசரி மனிதனின் தேவையை (வீடு, பணம், குழந்தை, ஆடம்பரம்) பகுத்து ஒதுக்கி, ரசனைக்காகவோ, காதலுக்காகவோ,  அர்த்தமுள்ளது என்று அவர்கள் கருதும் எதற்காகவோ வாழ்வார்கள்; அனால் குழம்பித் தள்ளுவார்கள். வாழ்க்கை அர்த்தமுள்ளதா? வேலைக்கு ஏன் செல்ல வேண்டும்? கடவுளா நம்மை காக்கிறார்? காசிருந்தால் போதுமா?என்று திரிசங்கில் சுற்றுவார்கள். சரி,அர்த்தமுள்ளதைச் செய்கிறாய், மனதை சந்தோஷமாக வைத்துக் கொள். அது தான் வாழ்க்கை என்றால்...மனமா?  எங்கே, தரையில் நீ நடக்கும் ஒற்றையடிப் பாதையை நான் அந்தரத்தில் 1000 அடி உயரத்தில் இரட்டையடி பலகைப் பாதையாய் வைக்கிறேன்...உன் மனதிடம் புரிய வைத்து நடுக்கம் இல்லாமல் நடந்து காட் டு பார்ப்போம். மனமாவது ஒன்றாவது என்று சீறுவார்கள்.

ஆனால் என்ன செய்ய முடியும்? மனதின் மாயையையாவது நம்பித் தானே ஆக வேண்டும். ஏனென்றால் வாழ்க்கையைப் புரிந்தவர்களை நான் பார்த்ததில்லையே


No comments:

Post a Comment