கடவுளைக் கீழிறக்கிவிட்டு
நம் காகித நண்பர் பதவியேற்று
ஆகி விட்டது வெகு காலம்.
இங்கு கனவின் பின்னால் ஓடவும் காசு தேவை.
அதை வாங்குவதற்கு அல்ல,
அடுத்தவன் காலடியில் விரிந்திருக்கும் நிலம்போல்
நம் காலும் ஒண்டிக்கொள்ளவொரு
சதுப்பு நிலமாவது வேண்டுமென்பதால்.
வெற்றுக்காற்றில் அடியெடுத்து வைக்க
குழந்தை போல் பயந்து, வீழ்வோமென்று நினைத்து
மண்ணில் புதைந்து, வாழ்ந்து தொலைந்து
நிமிர்ந்து பார்த்தால்
நாம் ஈன்ற ஒன்று, முழம் வரை புதைந்து
சவலையாய் தான் தத்தளிக்கும்.
வாழ்ந்து தொலைத்தோமா - இல்லை
இப்படி வாழ்ந்து எதையோ தொலைத்தோமா?
வீழ்ந்தாலும் தான் என்ன!
வீழ்தலும்
வானில் கீழ்நோக்கிப் பறத்தல் தானே!
கீழ்நோக்கி தான் என்று கண்டோமா!
பறந்தாவது பார்த்திருக்கலாம்
சேற்றுப்புண்ணைச் சொறிந்ததற்கு
வானம் எவ்வளவு சுகம்
என்றாவது உரைத்திருக்கும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment