நானெல்லாம் தோட்டிகள் புழக்கத்தில் இருக்கும் காலத்தில் பிறந்திருக்க வேண்டியவள். ஐயயோ! அவர்களைத் தப்பாகப் பேசுகிறேன் என்றெல்லாம் நினைக்க வேண்டாம். அவர்கள் மீது மிகுந்த மரியாதை உண்டு எனக்கு. பல குப்பை மனிதர்களின் குப்பையையே சுத்தப்படுத்தியிறார்களே! நான் சொன்னதற்குக் காரணம் முழுக்க முழுக்க சோம்பேறித்தனம்.
இதுவரை ஈரோட்டில் ஒரு அடுக்கு மாடிக் குடியிருப்பில் இருந்தோம். பராமரிப்புச் செலவு என மாதம் ஒரு 500 பிடுங்குவார்கள் (750 ஆய் அதிகப்படுத்தி விட்டதாய் கேள்வி); குடியிருப்பின் படிகளைக் கூட்ட, துடைக்க. இதில் குப்பையை தினமும் எடுத்துச் செல்வதும் அடங்கும். வீட்டிற்கு வெளியே வைத்து விட்டால் போதும்; கூட்டும் அம்மா எடுத்துக் கொண்டு சென்று விடுவார். எல்லாக் குப்பையையும் ஒரு மாநகராட்சி ஊழியர் வந்து ஒரு வண்டியில் வழித்துச் செல்வார்.
ஆனால் அந்த கூட்டும் அம்மா எங்கள் வீட்டிற்கு என்றால் மட்டும் ஓர வஞ்சனை பார்ப்பார். காலை ஆறு மணிக்கு அழைப்புமணியை அழுத்துவார். "கலெக்டர் அம்மா வந்துட்டாங்க," என்று என் அம்மா அரைத் தூக்கத்தில் தலையை முடிந்து ஓடுவதற்குள் இரண்டு நிமிடத்தில் மற்ற வீடுகளின் குப்பையை எடுத்துக் கொண்டு அவர் ஓடி விடுவார். எல்லாம் ஒரு பழி வாங்கல் தான். என் அண்ணன் எங்கள் அடுக்கு மாடியின் பொருளாளராய் இருக்கும்போது தினமும் வீட்டின் முன் இந்த அம்மா சம்பள முன்தொகை கேட்டு நிற்பார். முன்தொகை சம்பளத்தை மீற, ஒரு கட்டத்தில் மறுக்க வேண்டியதாகி விட்டது. அதன் விளைவு: இரண்டு நாள் குப்பை வீட்டில் சேர்ந்திருக்கும். இல்லை, நல்ல மனநிலையில் இருந்தால், சலித்துக் கொண்டே எடுத்துச் செல்வார். "சீக்கிரம் வர முடியாதா?" என்பார்; முணுமுணுப்பார். இதனால் சில சமயம் இரவே குப்பையை எடுத்து வெளியே வைத்து நிறைய நாள் சமாளிப்போம்.
அதற்கு முன் இருந்த வீடுகளில் அம்மா எங்கே குப்பையைக் கொட்டினார் என்பதெல்லாம் தெரியாது. குப்பை பற்றியெல்லாம் யோசித்து நேரத்தை வீணடிக்க வேண்டுமா என்று விட்டிருந்தேன் தனியே ஒரு வீடு எடுத்து வாழும் வரை (குப்பையைக் கொட்டும் வரை). முதலில் நாங்கள் பெங்களூரில் தங்கியிருந்த வீடு ஒரு குப்பை மேட்டின் அருகே. உண்மையைச் சொன்னால் அது குப்பை மேடு கிடையாது: ஒரு காலி இடம். அதில் கண்டபடிஹோட்டல் குப்பை, வீட்டுக்குப்பை எனக் கொட்டி ஒரு வழி பண்ணியிருந்தார்கள். அதன் வழியாக நடந்தாலே ஒரு பத்து எலிகளையாவது பார்க்கலாம். வீட்டின் கதவைத் திறந்தால் தூக்கி எறியும் தூரத்தில் அந்த காலி இடம்; குப்பையை எறிந்து விட்டு வந்து விடுவேன். முதலில் நேரமில்லாததால் செய்ய ஆரம்பித்து, பின் அதுவே பழகிப் போனது. குப்பைத் தொட்டி வாங்கி அதை ஒரு நாளும் உபயோகித்தது கிடையாது. வீட்டிற்கு வந்த என் அம்மா, "எவ்வளோ சவுகரியம்!" என்றெல்லாம் சந்தோசப் பட்டார்.
ஒரு ஞாயிற்றுக்கிழமை AAP கூட்டத்தை சேர்ந்த ஒரு குழுவினர் வீட்டினருகே இருந்த குப்பை மேட்டில் அங்கும் இங்கும் தெரிந்தார்கள். முகத்தை மூடி, கையுறை அணிந்து சுத்தம் செய்தார்கள்; ஈர மற்றும் காய்ந்த குப்பைகளுக்குத் தனித் தனியே குப்பைத் தொட்டிகள் வைத்து விட்டுச் சென்றார்கள். வெறும் வேடிக்கை தான் பார்த்தோம்; செருப்பால் அடித்ததைப் போல் இருந்தது. நாங்கள் பொதுவாக எங்கும் குப்பை போட மாட்டோம். Swacch Bharat பிரபலம் ஆவதற்கு முன்பே இது பழக்கம் தான். ரயிலிலோ பேருந்திலோ செல்லும்போது ஏதும் வாங்கிச் சாப்பிட்டால் அதன் உறையைத் தூக்கி எறியாமல் கையிலேயே வைத்திருப்போம். இல்லை பைக்குள் போட்டு விடுவோம். சாலையில் என்றால் குப்பைத் தொட்டி ஏதேனும் சிக்கும்வரை குப்பையை எறியாமல் கையில் வைத்திருப்போம். குப்பையை அப்படியே எறியும் ஆசாமிகளைப் பார்த்தால் அவ்வளவு எரிச்சல் வரும் எங்களுக்கு. ஆனால் வீட்டுக் குப்பையை இப்படி சோம்பேறித் தனம் பார்த்து பக்கத்திலேயே கொட்டி அசிங்கப் படுத்தி விட்டோமே என்று தோன்றியது.
அவ்வப்போது 'சுத்தம் சோறு போடும்' என்ற எண்ணத்தின் வீரியம் சுணங்கும் போது நிறைய பேர் தூண்டியிருக்கிறார்கள். தாய்லாந்தில் ஒருமுறை ஆங் தோங்க் தேசிய கடல் பூங்காவில் ஒரு மலையை எறிக் கொண்டிருந்தோம் (சும்மா தான்!) மலையேறுவதற்குத் தகுந்த காலணிகள் இல்லை. சாதாரண செருப்பைப் போட்டுக் கொண்டு 'சரி, எவ்வளவு முடியுமோ ஏறுவோம்' என்று ஏறிக் கொண்டிருந்தோம். மரங்களுக்கு இடையே திடமான கயிறைக் கட்டி வைத்திருந்தார்கள்; அதைப் பற்றிக் கொண்டு தான் ஏற வேண்டும். திணறிக் கொண்டு, அங்கங்கே சிராய்த்து, வழுக்கி 'எப்படி டா இறங்குவது!' என்று எண்ணி ஏறிக்கொண்டிருக்கையில், எங்கள் எதிரே ஒரு வெள்ளைக்காரர் இறங்கிக் கொண்டிருந்தார் (காலில் தகுந்த காலணியைத் தான் அணிந்திருந்தார்!) முகம் எல்லாம் சிவந்து வியர்க்க விறுவிறுக்க ஒரு கையில் கயிறைப் பற்றி இறங்கிக் கொண்டிருந்தார்; மறு கையில் ஒரு காலி தண்ணீர் பாட்டில். அவ்வளவு கடினமான பாதையிலும் அதைத் தூக்கி எறியாமல் இறங்கிக் கொண்டிருந்தார். அந்த ஆளில்லாத காட்டில் அவர் போடும் ஒரு பிளாஸ்டிக் பாட்டில் ஒரு வெங்காயத்தையும் சீரழிக்காது. ஆனால் அவ்வளவு சுற்றுப்புற சுகாதாரத்தின் விழிப்புணர்வு அவர் செய்கையில் தெரிந்தது.
அது இருக்கட்டும்! AAP தொண்டர்கள் குப்பைத் தொட்டிகள் வைத்தார்கள் என்று சொன்னேன் அல்லவா! அதை இரண்டே வாரத்திற்குள் திருடிச் சென்று விட்டார்கள். அடச்சீ! அவர்கள் இல்லை. வேறு யாரோ! பாவம், என்ன வறுமையோ திருடர்களுக்கு. அந்தத் தொட்டிகள் சோப்பு ஆயில் ஊற்றி வைக்கும் நீல நிற உருளைகள். ஒவ்வொன்றும் 1500க்கு மேல் தேறும். அதன் பின் அந்த குப்பைத் தொட்டிகள் இருந்த இடத்திலேயே குப்பையை வைக்கத் தொடங்கினோம். அவ்வப்போது யாரோ எரித்தார்கள். தற்காலிக சுபம்.
அதுவல்ல என் பிரச்சனை. புதிதாய் வீடு மாறினோம்; அம்மாவும் வந்து உதவினார்; குடியிருப்புகள் நிறைந்த பகுதி அது. காட்சிக்குக் கூட ஒரு குப்பைத் தொட்டி இல்லை. விசாரித்தால் 'அது எங்கயோ தூத்துக்குடி பக்கமோ துபாய் பக்கமோ' என்ற ரீதியில் பதில் வந்தது. சரி பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டு விட்டேன். ஒரு மழைக்காகிதம் முழுவதும் குப்பை நிரம்பியவுடன் கட்டி வைத்திருந்தேன். அது இரண்டானது, மூன்றானது...ஐந்தாகையில் இன்னொரு பெரிய மழைக்காகிதம் எடுத்து எல்லாவற்றையும் உள்ளே போட்டு இறுக்கக் கட்டி விட்டேன். இதற்கு நடுவே காகிதம் உடைந்து தரை நாறி, நான் துடைத்ததெல்லாம் வேறு கதை. தொலைபேசியில் அம்மா கேட்டார், "குப்பைத் தொட்டி கண்டுபிடிச்சுட்டியா?"
நான் சொன்ன பதிலில் குமட்டியே விட்டார்.
நானும் ரோஷத்தில் இன்றைக்கு எப்படியாவது குப்பையைக் கொட்டி விட வேண்டும் என்று கோணியளவு சேர்ந்து விட்ட குப்பையைத் தூக்கிக் கொண்டு கிளம்பினேன். எங்கள் தெருவின் முனையில் சில பேர் குப்பையைக் கொட்டியிருப்பார்கள். ஆனால் கொட்டலாமா என்று தெரியாது. கொட்டும்போது எதிர் வீட்டு அம்மா பார்த்து விட்டார். 'அங்கெல்லாம் கொட்டாதே மா' என்று கன்னடத்தில் வசைமொழியை ஆரம்பித்தார். 'ஆமாவா?' என்று கேட்டு நழுவி விட்டேன். ஆனால் இன்னும் அவருக்குத் தெரியாமல் நிறைய பேர் அங்கே கொட்டுகிறார்கள்.
பின் பத்தடி தூரத்தில் மரக் குப்பையெல்லாம் போட்டிருந்த ஒரு இடத்தில் வீசி விட்டு குடு குடுவென ஓடி வந்து விட்டேன். அடுத்த நாள் அதே வழியில் செல்லும்போது நாங்கள் சென்ற வாரம் கொறித்த தின்பண்டத்தின் காகித உறைகளும், நான் சீவி எறிந்த வெங்காயச் சருகுகளும் மழைக் காகிதத்தின் வெளியே சிதறிக் கிடந்தன. சுற்றி யார் குப்பையும் இல்லாமல் பல்லை இளித்துக் கொண்டு இருந்தது. ஆர். கே. நாராயண் என்று ஒரு எழுத்தாளர் இருந்தார். அவருடைய சுய சரிதையில் (My Days) அவர் பணத்திற்காக கஷ்டப்படும் காலத்தில் நடந்த ஒரு நிகழ்வை எழுதியிருப்பார். அவருடைய மனைவிக்காக கடன் வாங்கி ஒரு சேலையை வாங்கியிருப்பார். ஆனால் அக்கடனை முழுதாய் அடைத்திருக்கமாட்டார். அவர் மனைவி அந்த சேலையை ஆசையாய் உடுத்தி வெளியே வரும்போதெல்லாம் திருடனைப் போல் உணர்ந்தேன் என்று எழுதியிருப்பார். அது போல 'அது எங்கள் வீட்டுக் குப்பை இல்லை' என்று கத்திக் கொண்டு ஓடிவிடவேண்டும் என்று தோன்றியது.
அடுத்த வாரம் இன்னொரு பை சேர்ந்திருந்தது. வெளியே கிளம்பும்போது வண்டியில் வைத்துக் கொண்டு சென்றோம். வீட்டினருகே ஒரு சுடுகாட்டின் பக்கம் நிறைய குப்பை பார்த்தாய் நியாபகம். ஆனால் அங்கே குப்பை கொட்டினால் 500 ரூபாய் அபராதம் (பி. பி. எம். பி. உத்தரவு) என்று எழுதியிருந்தார்கள். பார்க்காததை போல் கொட்டி விட்டு ஓடி வந்தோம். இது தவறு! இனியாவது சரியாய் இருப்போம் என்று ஒரு இடத்தை கண்டுபிடித்தேன். அலுவலகம் செல்லும் வழியில் அது. ஏதோ ஒரு அடுக்கு மாடியின் முன்னால். ஒரு வாரம் அங்கே கொட்ட ஆரம்பித்தவுடன் நேற்று அங்கேயும் குப்பை கொட்டினால் அபராதம் என்ற பலகையை வைத்து விட்டார்கள். வேறு எங்க தான் யா கொட்டுவது?
இன்னொரு இடம் இருக்கிறது. சாலையின் ஒரு பக்கம் முழுவதும் குப்பை கொட்டியிருக்கும்; குமட்டும். அதைக் கடந்து வருவது அக்னி பரீட்சை போல்: நோய் பிடிக்காமல் தாண்டி வந்தால் தான் பத்தினி. பத்தடி தூரம் தள்ளி நின்று கல் எறிதல் கணக்காய் தம் கட்டி தூக்கி எறிந்துவிட்டு வந்திருக்கிறேன். அங்கேயும் அறிவிப்புப் பலகை வைக்கும் வரை நிம்மதி. குப்பையைப் பற்றி இவ்வளவு பெரிய பதிவு தேவையா என்று நீங்கள் திட்ட தொடங்கியிருப்பீர்கள் (அல்லது பதிவின் நடுவிலேயே). நான்கு நாட்களாய் என் வீட்டில் சேர்ந்திருக்கும் குப்பைக்கு என்ன பதில் சொல்வீர்கள்? இன்னும் திட்ட தோன்றினால் அதிக குப்பையும் குப்பை தொட்டியே இல்லாத இந்த ஊரையும் திட்டுங்கள் என்னை இதை எழுத வைத்ததற்கு.
சரி, ஒரு குப்பைக்கே இவ்வளவு அக்கப்போராய் இருக்கிறதே, வீட்டில் இன்னும் கழிவறை இல்லாதவர்களின் கதி? புதுப் புது இடமும் தேட வேண்டும், யாரும் பார்க்காத போதும் குப்பையைப் போட வேண்டும். மனித குப்பையைத் தான்!
No comments:
Post a Comment