Monday, 2 November 2009

மனம்

குனிந்து மண்டியிட்டு தரையை அரைவட்டமாக மொழுகிக்கொண்டேபின்னோக்கித் தவழ்ந்தாள் தாயம்மா. ஒடிசலான தேகம்; கனமாய்க் காற்றுஅடித்தால் தவிடுபொடியாகிவிடுமோ என்று அச்சுறுத்தும் உடல்வாகு. ஒரேயொரு பெண்ணைத் திருமணம் செய்து கொடுத்து விட்டு விதவையாய்வாழும் ஒரு கீழ்மட்ட தினக்கூலி. ஆனால் சிவாவிற்குத்தான் அவளைப் பார்க்கும்போதெல்லாம் ஊரின் ஒட்டுமொத்த வேலமுட்களும் ஒன்றுகூடி நெஞ்சில்பாய்ந்தது போல் சுருக்கென்று தைக்கும். அவளைக் காண சக்தி இல்லாமல்கடங்காரனை ஏய்க்கும் ஏழையைப் போல் ஓடி ஓடி ஒளிந்த நாட்கள் வெகுஅதிகம்.

அன்று-
"புஜ்ஜுக்குட்டி! என் பூனைக்குட்டி! என் ராசாத்தி! எம்புட்டு அழகா சிரிக்கறாபாருங்கைய்யா! சுத்தி போடணும் என் அழகுக்குட்டிக்கு!" என சொல்லிகொண்டேகையால் திருஷ்டி கழித்தாள் தாயம்மா. பட்டாசு சத்தம் போல் நெட்டைகள்முறிய," ஆத்தாடி எம்புட்டு திருஷ்டி!" என ஆச்சர்யப் பார்வை விடுத்தாள். அதற்குள் ஏனோ குழந்தை சிணுங்கினாள். "அடடே! அப்பாட்ட போணுமாடிசெல்லம்? இதோ போகலாம்," என்றபடி துணித்தொட்டிலில் இருந்து குழந்தையைஇலாவகமாகத் தூக்கி சிவாவைச் சம்மணமிடச் சொல்லி அவன் மடியில்கிடத்தினாள்.

"யப்பா! ஒரு அடி உயரம் தான். ஆனால் எத்தனைத் துடிப்பு!" மடியில்கிடத்தியவுடன்
சிவாவிடம் பொக்கை வாய் காட்டி சிரித்தது குழந்தை. சற்றேஉப்பிய ஜாதிமுல்லையைத் தொடுத்தாற்போல் ஐந்து பிஞ்சு விரல்கள்; மூன்றாம்பிறையின் சட்டையைப் பவுர்ணமி நிலவுக்கு உடுத்தியது போல்நடுப்பொத்தானுக்கும் ஓட்டைக்கும் இடைவெளிவிட்டு, இடையே தெரிந்தபாப்பாவின் வயிறு கொழு கொழுவென்றிருந்தது. சின்னக் கண்கள்; பட்டுப்போர்த்த வயிறு; கவலையில்லா வாழ்வு...பாரதி போற்றிப் பொறாமைப்பட்டசிட்டுக்குருவியின் மனித உருவம். ஆனால் எந்த சிட்டுக்குருவிக்காவது வருமாஇந்த பொக்கைவாய்ச் சிரிப்பு? அவளின் பஞ்சுக் கன்னத்தை தடவிக்கொண்டிருந்தசிவாவின் கையைப் பற்றி இழுத்தது குழந்தை.

கிட்டத்ததட்ட பத்து வருடங்களாய் இந்த வரத்திற்காக ஏங்கியவனுக்கு அன்றுவரை வெறுமையாய் இருந்த மனம் என்னும் சுவரில் அந்த மயிலிறகின் வருடல்மழைக்காலத்து மாலை நேரத்தைப் போல் மிகவும் இதமாய் இருந்தது. "வாழ்க்கைல இத விட என்ன இருக்கு தாயம்மா! ரொம்ப சந்தோஷமாஇருக்கேன்," தாயம்மாவிடம் அவன் உதடுகள் பேசினாலும் பாப்பாவிடம் தான்அவன் மனசு கொஞ்சியது.

"இவ்வளவு சுலுவா எப்படிய்யா ஒத்துக்கிட்டாங்க?"

"எல்லாம் கடவுளோட கருணை! இவ்வளவு சீக்கிரம் ஒத்துப்பாங்கன்னு நானேநினைக்கல. அன்னை இல்லத்தில இருந்த தெரிஞ்சவங்க மூலமாத் தான்பாப்பாவை கொண்டு வர முடிஞ்சது," என்றான் சிவா. சொல்லும்போது அன்றுநடந்ததை நினைக்காமல் இருக்க முடியவில்லை சிவாவால், பாட்டனார்வழிவந்த சொத்தான அந்த திருமண மண்டபத்தை நிர்வகிக்கும் பொறுப்புசிவாவிற்கு. வழக்கம் போல் அன்று காலை மண்டபத்திற்கு வந்த போது, மண்டபத்திற்குப் பக்கத்தில் வழக்கமாய் விஷேசங்கள் முடிந்து எச்சிலை போடும்ஓர் புதரின் அருகில் ஒரு சின்ன கூட்டம் கூடியிருந்தது. கூட்டத்திற்கு நடுவே, தொப்புள்கொடியின் ஈரம் கூட காயாத பிஞ்சு உருவத்தின் மேல் பிறப்பின்அடையாளமான பிசுபிசுப்பான திரவம் திட்டு திட்டாய்க் காலை நேர வெயிலில்பளபளத்தது. சுற்றியிருந்த கந்தல் துணியையும் மீறி அந்த கேவலின் தேகம்பளீரென்று மின்னியது. வெளிச்சத்தையும் அசுத்தத்தையும் சகிக்காமல்கையையும் காலையும்
ஆட்டிக் கொண்டே வீர்...வீர் என்று அழுதது அருகிலிருந்தமுட்செடி கீறிக்கொண்டே இருந்ததால், ஆங்காங்கே இரத்தம் வேறு கசிந்தது. மனம் பதை பதைக்க அருகில் சென்றான் சிவா.

'அழகு' என்ற சொல்லை வார்த்தையால் மட்டுமே கேட்டிருந்த அவனுக்குபிள்ளைத்தமிழ் இலக்கியமெல்லாம் தோற்கடிக்கும் அழகை அழுகையில்கண்டதும் மனம் ஏதோ செய்தது. வெகு கவனமாய் முட்களை விலக்கித்துணியோடு இலகுவாகத் தூக்கி கையில் வைத்தான் சிவா. "பொண்ணுயா! வெள்ளிக்கிழமை அன்னிக்குப் பொண்ணைத் தூக்கி ஏறிய எப்படித் தான் மனசுவருதோ?" குழந்தையைப் பார்த்த தாயம்மா பெருமூச்சோடு அங்கலாய்த்தாள். முட்களுக்கு மாறாக ஓர் மனமுள்ள மனிதனின் கைக்கு வந்ததும் குழந்தைநிம்மதியாகத் தூங்கியது. முறையாக காவல்துறை வந்து, குழந்தை அன்னைஇல்லத்தில் ஒப்படைக்கப்பட்டது. வாரங்கள் சென்ற பின்னும் அவன் மனதில்இருந்து மறையாத அந்த குழந்தைக்காக அங்கே இங்கே அலைந்து திரிந்து...

இன்று மடியில்
ரோஜாப்பூவாய்க் கிடந்தாள் குழந்தை.
"என்ன பேருங்கையா வைக்கறீங்க?" என்று கேட்டு அவன் பதிலுக்குக் கூடகாத்திராமல்," லட்சுமின்னு வைங்கையா...வெள்ளிக்கிழமை அன்னிக்கு பொறந்தபொண்ணு," என்று சொல்லி ஆர்வமாய் அவன் கண்கள் பார்த்தாள். "ம்...பார்க்கலாம் பார்க்கலாம்," என்று குரலைத் தாழ்த்தினான் சிவா. "ஏன்யாஅம்மா ஏதாவது சொல்லறாங்களா?"

நீண்ட மவுனத்திற்குப்பின்-
"ஏதாவது சொன்னா பரவாயில்லையே...பாப்பாவைப் பத்தி அன்னிக்குசொன்னேன். பதிலுக்கு முறைச்சுட்டு போயிட்டா. இதைப்பத்தி என்னநினைக்கிறானே தெரியல. நானும் எவ்வளவோ சொல்லிப் பாத்துட்டேன்..." என்றுஆரம்பித்த வாக்கியத்தை முடிக்க முடியாமல் அவனது தொண்டை கமறியது.

"ஒருதடவை வந்து பாத்தாங்கன்னா அவுக மனசு மாரும்யா," வாயைச் சப்பிக்கொண்டு மறுத்தான் சிவா.

லட்சுமி குப்புற விழுந்து அன்றோடு நாட்கள் ஆறு. சிவாவின் முகம் தேடி; அவன்குரல் கேட்டால் சிரித்து, நன்கு ஒட்டிக் கொண்டு வெகு நாட்களாகி விட்டது. அன்று காலையிலிருந்து லட்சுமியைத் தொடாமலேயே இருந்த சிவா, மாலைதாயம்மாவிடம்," நாளை எனக்கு தெரிஞ்சவங்க வருவாங்க. லட்சுமியஅதற்குள்ள தயார் செஞ்சு வச்சுரு. அவங்களோட தான் இன்மேல் அவ இருப்பா," என்று எங்கோ பார்த்துச் சொல்லி விட்டு நகர முயன்றான்.

"என்னச்சுங்கைய்யா?"-அவள் குரலில் பதற்றம் தெரிந்தது.

"என்ன பண்ண சொல்ற? மாசம் நாலு ஆச்சு! மகராசி ஒரு தடவை கூட இந்தகுழந்தைய வந்து பார்க்க மாட்டேங்கிறா...அவளோட குழந்தை தான் வேணுமாம், அதான் இனி முடியாதுன்னு எல்லா ஆஸ்பத்ரிலயும் சொல்லிட்டாங்கல்ல? இனிஎன்ன மந்திரத்திலையா வரும்? ஆண்டவன் ஒரு கதவ அடச்சா இன்னொரு கதவதிறக்கிறது இல்ல? என்ன குறைச்சல் பாப்பாவுக்கு? மீறிப் பேசுனா ஏதாவதுசெய்துப்பேன்னு சொல்றா. செஞ்சா செஞ்சுட்டு போறான்னு விட முடியல. நான்என்ன செய்ய?" என கேட்கும்போதே அவன் கண்களை நீர் திரையிட்டது. "என்னால பாப்பாவ வளர்க்க முடியும். ஆனா அம்மா பாசம் இல்லாம அவ வளர்றகொடுமை எனக்கு வேண்டாம். வீட்டுக்கே கூட்டிப் போகாம எத்தனை நாள்மண்டபத்துல வெச்சு வளர்க்க முடியும் சொல்லு? அதான் எங்கியாவது நல்லாராணியாட்டம் இருக்கட்டும்னு..." என்று கேவிக் கேவி சொல்ல வந்ததை முடிக்கமுடியாமல் தவித்தான் சிவா.

அடுத்த நாள் காலை. "லட்சுமி தயாரா?" குரலில் சுரத்தியே இல்லாமல் கேட்டான்சிவா. "ஆங்...ஆச்சுங்கைய்யா," என்று தாயம்மா தயங்கிக் கொண்டே அருகில்வந்தாள்,"அய்யா, நீங்க தப்பா நினைக்கலைன்னா என் கட்டை வேகுற வரைக்கும்நான் லட்சுமியை
பாத்துக்கறேன்யா...எம்புள்ள ஒண்ணு புருஷன் வீட்லஇருக்குது. இன்னொரு புள்ளையா இவளையும் வளர்த்தறேன்யா. என் சம்பாத்தியத்துல இன்னொரு புள்ளையையும் வளர்த்தலாம்யா. வெள்ளிக்கிழமைபொறந்த லட்சுமி...தொரத்தி அடிச்சராதீங்கைய்யா!" தாயம்மா மண்டியிட்டுக்கெஞ்சியபோது சாட்டையால் அடித்ததைப் போல் சுரீர் என்று பட்டது சிவாவிற்கு.

இன்றும் தான்- தன் குழந்தை அந்த தினக்கூலியின் வீட்டில் வளர்வதைநினைக்கையில்.

கணக்கில்லா காசிருந்தும் மனதளவில் இரவலனாய் வாழும் பலரில் சிவாவும்ஒருவன்.

No comments:

Post a Comment